செந்தமிழ்.org

மணியே

அபிராமி அந்தாதி
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும்
ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால்
இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும்
திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே!
நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும்
நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே!
நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே,
வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.