செந்தமிழ்.org

சுடரும்

அபிராமி அந்தாதி
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம்
பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை
இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம்,
இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ?
மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும்
கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!