செந்தமிழ்.org

கொள்ளேன்

அபிராமி அந்தாதி
கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.

அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை
மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப்
பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை
விரும்ப மாட்டேன். மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளேயும்,
யாவற்றினுக்கும் வெளியேயும் நிறைந்திருப்பவளே! எம்முடைய
உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் கள்ளே! ஆனந்தத்திற்கு
ஆனந்தமானவளே! எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என்
கண்மணி போன்றவளே!