செந்தமிழ்.org

கருத்தன

அபிராமி அந்தாதி
கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும்,
கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென
மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ
உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப்
பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட
அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய
ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய
சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.