செந்தமிழ்.org

அதிசயம்

அபிராமி அந்தாதி
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?

அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை
போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய
அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன்
முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக
நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து,
அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.