பாரதியார் பாடல்கள்

வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத் தராய்விடு வாரோ? - பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும் முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித் தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத் தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே) ----- 2. ஜய வந்தே மாதரம் ராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி பல்லவி வந்தே மாதரம் - ஜய வந்தே மாதரம். சரணங்கள் ஜயஜய பாரத ஜயஜய பாரத ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே) ஆரிய பூமியில் நாரிய ரும் நர சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே) நொந்தே போயினும் வெந்தே மாயினும் நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே) ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர் சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே) ------ 3. நாட்டு வணக்கம் ராகம் - காம்போதி தாளம் - ஆதி எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன் வாயுற வாழ்த்தேனோ? - இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ? இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள் ஈந்ததும் இந்நாடே - எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர் கன்னிய ராகி நிலவினி லாடிக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல் போந்ததும் இந்நாடே - இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ? மங்கைய ராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர் தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித் தழுவிய திந்நாடே - மக்கள் துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர் அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே - இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ? ----- 4. பாரத நாடு ராகம் - இந்துஸ்தானி தாளம் - தோடி பல்லவி பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு. சரணங்கள் ஞானத்தி லேபர மோனத்திலே - உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில் ஈரத்தி லேஉப காரத்திலே சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு தருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப் பன்மையி லேமறத் தன்மையிலே பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின் புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத் தண்மையி லேமதி நுண்மையிலே உண்மையி லேதவ றாத புலவர் உணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) யாகத்தி லேதவ வேகத்திலே - தனி யோகத்தி லேபல போகத்திலே ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம் அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல் காற்றினி லேமலைப் பேற்றினிலே ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே தேட்டத்தி லேஅடங் காத நதியின் சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)) ---- 5. பாரத தேசம் ராகம் - புன்னாகவராளி பல்லவி பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார். சரணங்கள் வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத) சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத) வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம், எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத) முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே, மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே, நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத) சிந்து நதியின்மிசை நிலவினி லே சேர நன்னாட்டிளம் பெண்களுட னே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத) கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத) காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம் ராசபுத் தானத்து வீரர் தமக்கு நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத) பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகளென வீதி குவிப்போம் கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத) ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம் உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத) குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம் கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம் நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத) மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம் வானையளப் போம்கடல் மீனையளப்போம் சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம் சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத) காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம் ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம் உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத) சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம் நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும் நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத) 6. எங்கள் நாடு ராகம் - பூபாளம் மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாநில மீதிது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே பார் மிசை யேதொரு நூல்இது போலே? பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே. மாரத வீரர் மலிந்தநன் னாடு மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தநன் னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே. இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம் ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம் தன்னலம் பேணி இழிதொழில்கற் போம் தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம் கன்னலும் தேனும் கனியும் இன் பாலும் கதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும் உன்னத ஆரிய நாடெங்கள் நாடே ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே. 7. ஜயபாரத சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள் மறந்த விர்ந்த் நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் இறந்து மாண்பு தீர மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும் அறந்த விர்க்கி லாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே! நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேய வாணர்கள் தேறும் உண்மை கொள்ள இங்கு தேடி வந்த நாளினும் மாறு கொண்டு கல்லி தேய வண்ணி தீர்ந்த நாளினும் ஈறு நிற்கும் உண்மை யொன்று இறைஞ்சி நிற்பவள் வாழ்கவே! வில்லர் வாழ்வு குன்றி ஓய வீர வாளும் மாயவே வெல்லுஞானம் விஞ்சி யோர்செய் மெய்மை நூல்கள் தேயவும் சொல்லும் இவ் வனைத்தும் வேறு சூழ நன்மை யுந்தர வல்ல நூல் கெடாது காப்பள் வாழி அன்னை வாழியே! தேவ ருண்ணும் நன்ம ருந்து சேர்ந்த கும்பம் என்னவும் மேவுவார் கடற்கண் உள்ள வெள்ள நீரை ஒப்பவும் பாவ நெஞ்சினோர் நிதம் பறித்தல் செய்வ ராயினும் ஓவி லாதசெல்வம் இன்னும் ஓங்கும் அன்னை வாழ்கவே! இதந்தரும் தொழில்கள் செய்து இரும்பு விக்கு நல்கினள் பதந்தரற் குரிய வாய பன்ம தங்கள் நாட்டினள் விதம்பெறும்பல் நாடி னர்க்கு வேறொ ருண்மை தோற்றவே சுதந்திரத்தி லாசை இன்று தோற்றி னாள்மன் வாழ்கவே! 8. பாரத மாதா தான தனந்தன தான தனந்தன தானனத் தானா னே. முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடை வில்? - எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் ஆரிய ராணியின் வில். இந்திர சித்தன் இரண்டு துண்டாக எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள் மந்திரத் தெய்வம் பாரத ராணி, வயிரவி தன்னுடைய வில். ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள் உலகின்பக் கேணி என்றே - மிக நன்று பல்வேதம் வரைந்தகை பாரத நாயகி தன்திருக் கை. சித்த மயமிவ் உலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம் அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல் ஆரிய ராணியின் சொல். சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத் தட்டி விளையாடி - நன்று உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை. காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரிய தேவியின் தோள். சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம் தந்த தெவர் கொடைக்கை? - சுவைப் பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும் பாரத ராணியின் கை. போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை புகன்ற தெவருடை வாய்? - பகை தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத தேவிமலர் திரு வாய். தந்தை இனிதுறந் தான் அர சாட்சியும் தையலர் தம்முறவும் - இனி இந்த உலகில் விரும்புகி லேன் என்றது எம் அனை செய்த உள்ளம். அன்பு சிவம்உல கத்துயர் யாவையும் அன்பினிற் போகும் என்றே - இங்கு முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி. மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் சனகன் மதி - தன் மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி. தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம் செய்த தெவர் கவிதை? - அயன் செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத தேவி அருட் கவிதை. ----- 9. எங்கள் தாய் (காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு) தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம் எங்கள் தாய். யாரும் வகுத்தற் கரிய பிராயத்த ளாயினு மேயங்கள் தாய் - இந்தப் பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப் பயின்றிடு வாள்எங்கள் தாய். முப்பதுகோடி முகமுடை யாள்உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள். நாவினில் வேத முடையவள் கையில் நலந்திகழ் வாளுடை யாள் - தனை மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை வீட்டிடு தோளுடையாள். அறுபது கோடி தடக்கைக ளாலும் அறங்கள் நடத்துவள் தாய் - தனைச் செறுவது நாடி வருபவ ரைத்துகள் செய்து கிடத்துவள் தாய். பூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும் புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில் தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந் துர்க்கை யனையவள் தாய். கற்றைச் சடைமதி வைத்த துறவியைக் கைதொழு வாள்எங்கள் தாய் - கையில் ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும் ஒருவனை யுந்தொழு வாள். யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும் ஒன்றென நன்றறி வாள் - உயர் போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும் பொற்குவை தானுடையாள். நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரி வாள்எங்கள் தாய் - அவர் அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின் ஆனந்தக் கூத்தி டுவாள். வெண்மை வளரிம யாசலன் தந்த விறன்மக ளாம்எங்கள் தாய் - அவன் திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ் சீருறு வாள்எங்கள் தாய். ----- 10. வெறி கொண்ட தாய் ராகம் - ஆபோகி தாளம் - ரூபகம் பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை காய்தழல் ஏந்திய பித்தன் - தனைக் காதலிப்பாள் எங்கள் அன்னை. (பேயவள்) இன்னிசை யாம்இன்பக் கடலில் - எழுந்து எற்றும் அலைத்திரள் வெள்ளம் தன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத் தாவிக் குதிப்பாள் - எம் அன்னை (பேயவள்) தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில் தெய்வீக நன்மணம் வீசும் தேஞ்சொரி மாமலர் சூடி - மது தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்) வேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை வேல்கையிற் பற்றிக் குதிப்பாள் ஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்ந் தோதி யுலகெங்கும் விதைப்பாள் (பேயவள்) பாரதப் போரெனில் எளிதோ? - விறற் பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள் மாரதர் கோடிவந் தாலும் - கணம் மாய்த்துக் குருதியில் திளைப்பாள் (பேயவள்) ----- 11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், புன்மை யிருட்கணம் போயின யாவும், எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன் தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம், பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம் வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்! வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்! தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார், அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை! ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே! பருதியின் பேரொளி வானிடைக் கண்டோ ம், பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம், கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம் சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே! நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்! நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே! நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ? பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப் பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே! என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே? இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ? இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே! மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ? மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ? குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ? கோமகளே! பெரும் பாரதர்க் கரசே! விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய் இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்! ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே! ------ 12. பாரத மாதா நவரத்தின மாலை (இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப் பட்டிருக்கின்றன) (காப்பு) வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமா தாவின் பதமலர்க்கே - சீரார் நவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம் சிவரத்தன மைந்தன் திறம். (வெண்பா) திறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி அறமிக்க சிந்தை அறிவு - பிறநலங்கள் எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன் கண்ணொத்த பேருரைத்தக் கால். (கட்டளை கலித்துறை) காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக் கும்பிட்டுக் கம்பனமுற் றோலிமிட்டோ டி மறைந்தொழி வான், பகை யொன்றுளதோ? நீலக் கடலொத்fத கோலத்தி ளாள்மூன்று நேத்திரத்தாள் காலக் கடலுக்கோf பாலமிட் டாள்அன்னை காற்படினே. (எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்) அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம் ஆணிமுத்துப் போன்றமணிமொழிக ளாலே பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள் பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள் இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம் என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்? மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே. (ஆசிரியப்பா) வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! கற்றவ ராலே உலகுகாப் புற்றது உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம் இற்றைநாள் வரையினும் அறமிலா மறவர் குற்றமே தமது மகுடமாக் கொண்டோ ர், மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார் பற்றை அரசர் பழிபடு படையுடன் சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார் இற்றைநாள் பாரி லுள்ள பலநாட் டினர்க்கும் பாரத நாடு புதுநெறி பழக்கல் உற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும் கவீந்திரனாகிய ரவீந்திர நாதன் சொற்றது கேளீர்! புவிமிசை யின்று மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன் தர்மமே உருவமாம் மோஹன தாஸ் கர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான் அத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே அரசிய லதனிலும் பிறஇய லனைத்திலும் வெற்றி தருமென வேதம் சொன்னதை முற்றும் பேண முற்பட்டு நின்றார் பாரத மக்கள் இதனால் படைஞர் தம் செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே (வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! ) (தரவு கொச்சக் கலிப்பா) ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள் ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ! தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோ ம் வேதனைகள் இனிவேண்டா, விடுதலையோ திண்ணமே. (வஞ்சி விருத்தம்) திண்ணங் காணீர்! பச்சை வண்ணன் பாதத் தாணை எண்ணம் கெடுதல் வேண்டா! திண்ணம் விடுதலை திண்ணம். (கலிப்பா) விடுத லைபெறு வீர்வரை வாநீர் வெற்றி கொள்வீர் என்றுரைத் தெங்கும் கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின் கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்? சுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை எடுமி னோஅறப் போரினை என்றான் எங்கோ மேதகம் ஏந்திய காந்தி! (அறுசீர் விருத்தம்) காந்திசேர் பதுமராகக் கடிமலர் வாழ்ஸ்ரீதேவி போந்துநிற் கின்றாள் இன்று பாரதப் பொன்னாடெங்கும் மாந்தரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார் காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே (எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்) கணமெனு மென்றன் கண்முன்னே வருவாய் பாரத தேவியே கனல்கால் இணைவழி வால வாயமாஞ் சிங்க முதுகினில் ஏறிவீற் றிருந்தே துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம் துயர்கெட விடுதலை யருளி மணிநகை புரிந்து திகழ்திருக் கோலம் கண்டுநான் மகிழ்ந்திடு மாறே.- ----- 13. பாரத தேவியின் திருத் தசாங்கம் நாமம் (காம்போதி) பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப் பிச்சை யருளியதாய் பேருரையாய்! - இச்சகத்தில் பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த பாரதமா தேவியெனப் பாடு. நாடு (வசந்தா) தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! - வானாடு பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும் ஆரியநா டென்றே அறி. நகர் (மணிரங்கு) இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள் நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது தானென்ற காசித் தலம். ஆறு (சுருட்டி) வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத் தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும் வான்போந்த கங்கையென வாழ்த்து. மலை (கானடா) சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள் வாலை வளரும் மலைகூறாய்! - ஞாலத்துள் வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும் பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு. ஊர்தி (தன்யாசி) சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள் ஊரும் புரவி உரைதத்தாய்! தேரின் பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும் அரிமிசையே ஊர்வாள் அவள். படை (முகாரி) கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய் செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்! - பொருபவர் மேல்தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம் திண்ணமுறு வான்குலிசம் தேறு. முரசு (செஞ்சுருட்டி) ஆசை மரகதமே! அன்னை திரு முன்றிலிடை ஓசை வளர்முரசம் ஓதுவாய்! - பேசுகவோ சத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய் முத்திதரும் வேத முரசு. தார் (பிலகரி) வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடர் தாராள் புனையுபணித் தார்கூறாய்! - சேராரை முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள் பொற்றா மரைத்தார் புனைந்து. கொடி (கேதாரம்) கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! சூத்திரமும் தீங்கும் மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார் நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி குன்றா வயிரக் கொடி. ------ 14. தாயின் மணிக்கொடி பாரீர் (பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்) தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு பல்லவி தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! சரணங்கள் ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே பாங்கின் எழுதித் திகழும் - செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்) பட்டுத் துகிலென லாமோ? - அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று மட்டு மிகுந்தடித் தாலும் - அதை மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்) இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்) கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்) அணியணி யாயவர் நிற்கும் - இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? பணிகள் பொருந்திய மார்பும் - விறல் பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்) செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந் தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர் சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின் சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்) கன்னடர் ஓட்டிய ரோடு - போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும் பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்) பூதலம் முற்றிடும் வரையும் - அறப் போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும் மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்) பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத் தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்) சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத் தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்) ------ 15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை நொண்டிச் சிந்து நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு) மந்திர வாதி என்பார் - சொன்ன மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார், யந்திர சூனி யங்கள் - இன்னும் எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! தந்த பொருளைக் கொண்டே - ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம அந்த அரசியலை - இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு) சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார், துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார், அப்பால் எவனோ செல்வான் - அவன் ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார், எப்போதும் கைகட்டுவார் - இவர் யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு கோடிஎன் றால் அது பெரிதா மோ? ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன் ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால் நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு) சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார், தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார, ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன் அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலையே - இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே, கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின் றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார், நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங் கோடி நயந்துநின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு) ----- 16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் (போகின்ற பாரதத்தைச் சபித்தல்) வலிமையற்ற தோளினாய் போ போ போ மார்பி லேஒடுங்கினாய் போ போ போ பொலிவி லாமுகத்தினாய் போ போ போ பொறி யிழந்த விழியினாய் போ போ போ ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ ஒளியி ழந்த மேனியாய் போ போ போ கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ இன்று பார தத்திடை நாய்போல ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ சென்று போன பொய்யெலாம் மெய்யாகச் சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக விழிம யங்கி நோக்குவாய் போ போ போ வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும் நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ மாறு பட்ட வாதமே ஐந்நூறு வாயில் நீள ஓதுவாய் போ போ போ சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர் சிறிய வீடு கட்டுவாய் போ போ போ ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ தரும மொன்றி யற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் காசொன்று நீட்டினால் வணங்குவாய் போ போ போ தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே தீமை நிற்கி லோடுவாய் போ போ போ சோதி மிக்க மணியிலே காலத்தால் சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ. (வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்) ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா களிப டைத்த மொழியினாய் வா வா வா கடுமை கொண்ட தோளினாய் வா வா வா தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா ஏறு போல் நடையினாய் வா வா வா மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு வேதமென்று போற்றுவாய் வா வா வா பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா நோய்க ளற்ற உடலினாய் வா வா வா தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த் தேசமீது தோன்றுவாய் வா வா வா இளைய பார தத்தினாய் வா வா வா எதிரிலா வலத்தினாய் வா வா வா ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும் உதய ஞாயி றொப்பவே வா வா வா களையி ழந்த நாட்டிலே முன்போலே கலைசி றக்க வந்தனை வா வா வா விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல் விழியி னால் விளக்குவாய் வா வா வா வெற்றி கொண்ட கையினாய் வா வா வா விநயம் நின்ற நாவினாய் வா வா வா முற்றி நின்ற வடிவினாய் வா வா வா முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா கருதிய தியற் றுவாய் வா வா வா ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா ----- 17. பாரத சமுதாயம் ராகம் - பியாக் தாளம் - திஸ்ர ஏகதாளம் பல்லவி பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க! பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய (பாரத) அனுபல்லவி முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத) சரணங்கள் மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில் வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த வாழ்க்கை இனியுண்டோ ? இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெருநாடு, கனியும் கிழங்கும் தானி யங்களும் கணக்கின்றித் தரு நாடு - இது கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு - வாழ்க! (பாரத) இனியொரு விதிசெய் வோம் - அதை எந்த நாளும் காப்போம், தனியொரு வனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க! (பாரத) எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றுரைத்தான் கண்ண பெருமான், எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம் இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க! (பாரத) எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத) ----- 18. ஜாதீய கீதம் (பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு) இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை! தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை! பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே) வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை! மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை! குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை! நல்குவை இன்பம், வரம்பல நல்குவை! முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும் அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும் திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்? அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி! பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே) நீயே வித்தை நீயே தருமம்! நீயே இதயம் நீயே மருமம்! உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே) தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே! சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே! ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே) ஒருபது படைகொளும் உமையவள் நீயே! கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ! வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே) போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை! இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை சாமள நிறத்தினை சரளமாந் தகையினை! இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை! தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே) ----- 19. ஜாதீய கீதம் (புதிய மொழிபெயர்ப்பு) நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே) தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே) கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும் கோடி கோடி புயத்துணை கொற்றமார் நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும், கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்? ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை, மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே) அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ. ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே) பத்துப் படைகொளும் பார்வதி தேவியும் கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும் அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே) திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை! தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை மருவு செய்களின் நற்பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை பெருகு மின்ப முடையை குறுநகை பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை. இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை, எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே) ---- 2. தமிழ்நாடு 20. செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்) முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்) கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்) வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்) விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்) சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்) ------ 21. தமிழ்த்தாய் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார், ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன் நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன் நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச் சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச் சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன் காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம் என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர் யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்! தந்தை அருள்வலி யாலும் - முன்பு சான்ற புலவர் தவ வலி யாலும் இந்தக் கணமட்டும் காலன் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான். இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும, மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவும் கூடுவ தில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் என்றந்தப் பேதை உரத்தான் - ஆ! இந்த வசையெனக் கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! தந்தை அருள்வலி யாலும் - இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும் இந்தப் பெரும்பழி தீரும் புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். ----- 22. தமிழ் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம், பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை, ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளி நாட்டோ ர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார், தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார். ----- 23. தமிழ்மொழி வாழ்த்து தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே! வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே! ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழிய வே! சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையக மே! தொல்லை வினை தரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நா டே! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி யே! வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே! ----- 24. தமிழச் சாதி. ..........எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய், நாட்பட நாட்பட நாற்றமு சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ? விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும் தனது தருமமும் மாயாது என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச் சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? விதியே தமிழச் சாதியை எவ்வகை விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய். ஏனெனில் சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும் திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும் எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம் சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான் உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக் கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன். ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய தமிழச் சாதி தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்